ஐந்து நாடுகளிலும் பிரிந்திருக்கும் மாபெரும் குர்திஸ்தான் பிராந்தியம் |
அஷ்கர் தஸ்லீம்
மத்திய
கிழக்குப் பிராந்தியம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், சர்வதேச அரசியலில் மிகுந்த
தாக்கம் செலுத்தி வருகின்றது. உஸ்மானிய முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, துண்டாடப்பட்ட மத்திய கிழக்கில் குர்தி
இன மக்கள் பிரதான நான்கு
நாடுகளில் சிதறும் வகையில் நாடுகள்
பிரிக்கப்பட்டுள்ளன. ஈராக், ஈரான், துருக்கி,
சிரியா மற்றும் -சிறியளவில்- ஆர்மேனியா ஆகிய நாடுகளில் குர்தி
இன மக்கள் வாழ்கின்றனர். மத்திய
கிழக்கில் இன அடிப்படையில் நான்காவது
பெரும்பான்மை இனமான குர்திகளுக்கு, இன
அடிப்படையிலான தேசமொன்று இல்லை. எனவேதான், தமது
இனத்துக்கான தேசமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் குர்திக்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில்
ஆயுத ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய
கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமாக குர்திக்கள்
அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இன்றைய, தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா,
வட ஈராக், வடமேற்கு ஈரான்
மற்றும் தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளிலேயே இவர்கள்
மிகவும் செறிவாக வாழ்கின்றனர். இந்த
ஐந்து பிராந்தியங்களும் ஒவ்வொன்றுடனும் இணைந்தவாறு, அவ்வந்த நாடுகளில் எல்லைப்
பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. எனவே, குர்திக்கள் வாழும்
இந்தப் பிராந்தியங்கள் இணைந்து மாபெரும் ‘குர்திஸ்தான்’
பிராந்தியத்தை சமைக்கின்றது.
மிகப் பெரும்பான்மையான குர்திகள் ஸுன்னி இஸ்லாமியர்களே. குர்திக்களுக்கென்று
முறையான நிலையான மொழி வழக்கு
இல்லாதபோதும், குர்தி மொழியும், குர்தி
கலாசாரமும் அவர்களை இணைக்கின்றது. தேசிய
அரசுகள் உருவாகத் தொடங்கிய 20 ஆம் நூற்றாண்டு தொடக்கமே,
தமக்கான ஒரு தேசிய அரசை
உருவாக்க வேண்டுமென்று குர்திக்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். இருப்பினும், அதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும்
அவர்களுக்குக் கிட்டவில்லை.
முதலாம்
உலகப் போருக்குப் பின்னர் துருக்கிய உஸ்மானிய
சாம்ராஜ்யம் வீழ்ச்சி கண்டது. இங்கு வெற்றிபெற்றிருந்த
மேற்கத்தேய நேச அணி, குர்தி
தேசமொன்று உருவாக்கப்படும் என்று 1920 ஏற்படுத்தப்பட்ட செவ்ரெஸ் உடன்படிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், மூன்று வருடங்களின் பின்னர்,
ஏற்படுத்தப்பட்ட லவ்ஸன் உடன்படிக்கையின் மூலம்,
நவீன துருக்கிக்கான தேச எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டதோடு,
குர்திக்களின் கனவு பாலாக்கப்பட்டு, தாம்
வாழும் பிராந்தியங்களில் உருவாக்கப்பட்ட நாடுகளில் ஒரு இனச் சிறுபான்மையாக
குர்திக்கள் ஆக்கப்பட்டனர். அது தொடக்கம், தமக்கான
சுதந்திர தேசமொன்றை உருவாக்க வேண்டும் என்ற குர்திக்களின் முயற்சிகள்
அனைத்தும் முறியடிக்கப்பட்டே வந்தன.
துருக்கியின் குர்தி
மக்கள்
துருக்கி
சனத்தொகையில் அன்னளவாக 15-20 வீதத்திற்கும் இடைப்பட்டோர் குர்திக்களே. துருக்கியின் அனைத்து மாகாணங்களிலும் குர்திக்கள்
வாழ்ந்தபோதும், துருக்கியின் தென்கிழக்குப் பகுதியிலேயே இவர்கள் மிகச் செறிவாக
வாழ்கின்றனர். துருக்கி குடியரசு 1923 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது
முதல், குர்திக்களின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை
இல்லாமலாக்கும் முயற்சிகள் அரச தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டு
வந்தது. 1991 ஆம் ஆண்டு வரை,
குர்திக்கள் ‘மலைப் பிரதேச துருக்கியர்’
(துருக்கியில் குர்திக்கள் வாழும் பிரதேசம் மலைப்பாங்கானதே)
என்றே அழைக்கப்பட்டு வந்தனர். ‘குர்தி, குர்திஸ்தான், குர்திஷ்”
என்ற சொற்கள்கூட துருக்கி அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதுவரை, பொது
வெளியில் குர்தி மொழியும் தடை
செய்யப்பட்டிருந்தது.
1978 இல்
அப்துல்லாஹ் ஓச்லான் குர்திஸ்தான் தொழிலாளர்
கட்சியை (PKK) ஆரம்பித்தார். இந்த இயக்கம் துருக்கியில்
ஒரு சுதந்திர குர்தி நாட்டுக்கான அழைப்பை
விடுத்தது. ஆறு வருடங்களின் பின்னர்
துருக்கிய அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை
PKK ஆரம்பித்தது. அது முதல் 40,000 க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அப்துல்லாஹ் ஓச்லான் |
2012 ஆம்
ஆண்டு துருக்கி அரசாங்கமும் PKK இயக்கமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, அதற்கடுத்த வருடம் சமாதான உடன்படிக்கை
ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. 2015 ஜூலையில்
சமாதான உடன்படிக்கை முறிக்கப்பட்டு, துருக்கி அரச படைகளுக்கும் PKK இயக்கத்திற்கும்
இடையில் யுத்தம் மூண்டது. அது
முதல் ஐ.எஸ் மற்றும்
PKK இயக்கத்திற்கு எதிராக துருக்கி தாக்குதல்
மேற்கொண்டு வருகின்றது. இந்த வருடம் பெப்ரவரியில்
அங்காராவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு குர்தி இயக்கமான YPG
மீது குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.
YPG மற்றும் PYD என்பன PKK யுடன் இணைந்துள்ள, ஒரே
இலட்சியத்தைக் கொண்ட இயக்கங்கள் என்றும்
அவை தீவிரவாத இயக்கங்கள் என்றும் துருக்கி அரசாங்கம்
கருதுகின்றது.
சிரியாவின் குர்தி
மக்கள்
சிரிய சனத்தொகையில் 7-10 க்கு இடைப்பட்ட வீதத்தினர்
குர்தி மக்களாவர். சிரியாவின் வட கிழக்கு பகுதியிலேயே
குர்திக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சிரிய
ஜனாதிபதி பஷர் அல்அஸதுக்கு எதிரான
மக்கள் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், டமஸ்கஸ், அலப்போ, கொபானி, அஃப்ரின்,
கமிஷ்லி ஆகிய நகரங்களிலும் குர்திக்கள்
பெருமளவு வாழ்ந்தனர்.
சிரிய குர்திக்களுக்கு நீண்ட காலமாக அடிப்படை
உரிமைகள் மறுக்கப்பட்ட வந்துள்ளது. 1960 முதல் 300,000 குர்திக்களுக்கு பிரஜா உரிமை கூட
வழங்கப்படவில்லை. குர்தி மக்களின் பிராந்தியங்கள்
பறிமுதல் செய்யப்பட்டு, அப்பிரதேசங்களில் அரபுக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குர்தி மக்களின் அபிலாஷைகளை
எதிர்க்கும் முகமாக, குர்தி மக்களின்
ஆர்ப்பாட்டங்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு,
குர்தி அரசியல்வாதிகள் கைதும் செய்யப்பட்டனர்.
ஸாலிஹ் முஸ்லிம் |
சிரிய போராட்டத்தின் முதல் இரு வருடங்களிலும்,
குர்திஷ் பிராந்தியங்கள் பாதிக்கப்படவில்லை. பிரதான குர்தி கட்சிகளும்
தரப்புக்களும் பஷார் அஸதுக்கு எதிரான
மக்கள் போராட்டத்தில் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவில்லை.
இருப்பினும், 2012 நடுக்கூறுகளில், அஸதுக்கு எதிரான போராளிக் குழுக்களுடன்
யுத்தம் செய்வதற்காக, குர்தி பிராந்தியங்களிலிருந்து இராணுவம் கலைந்து
சென்றதும், குர்தி குழுக்கள் பிராந்தியத்தை
தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.
ஜனநாயக
ஐக்கி கட்சி (PYD) ஒரு பிரதான சக்தியாகப்
பரிணமித்து, தம்மை ஒத்த ஏனைய
குழுக்களுடன் உறவுகளை ஏற்படுத்தி, குர்திஸ்தான்
தேசிய கவுன்ஸிலை நிறுவியது. பின்னர், 2014 ஜனவரியில் கொபானி, அஃப்ரின், கமிஷ்லி
ஆகிய பகுதிகளையும் உள்ளகப்படுத்தி, தன்னாட்சி கொண்ட ஜனநாயக அரசாங்கத்தை
தாம் நிறுவியுள்ளதாக அறிவித்தது. தாம் சிரியாவிலிருந்து பிரிந்து,
தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்ள தாம் முயற்சிக்கவில்லை
என்றும், ஃபெடரல் முறைமையில் அமைந்த
உள்நாட்டு ஜனநாயக நிர்வாகத்தையே அவர்கள்
விரும்புவதாகவும் அறிவித்தனர்.
சிரிய போராட்டத்திற்கு முடிவு காணப்படும்போது, குர்திக்களுக்கான
சட்ட ரீதியான உத்தரவாதம் வழங்கப்பட
வேண்டும் என்றும், குர்திக்களின் தன்னாட்சி அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்றும் PYD யின் தலைவர் ஸாலிஹ்
முஸ்லிம் வலியுறுத்துகிறார்.
ஈராக்கின் குர்தி
மக்கள்
ஈராக் சனத்தொகையில் 15-20 வீதத்துக்கும் இடைப்போர் குர்திக்களாவர். ஏனை நாடுகளில் குர்திக்களின்
நிலையை விட மிக சிறந்ததொரு
சுதந்திரத்தை ஈராக் குர்திக்கள் அனுபவித்து
வந்தனர், இருப்பினும், அவர்களும் பல சிக்கல்களுக்கு முகம்
கொடுத்தே வந்தனர்.
மஸ்ஊத் பார்ஸானி |
ஈராக் பிரித்தானியரின் கீழ் இருந்தபோது, அவர்களுக்கு
எதிராக குர்திக்கள் போராட்டம் நடத்தினர். 1946 இல் முஸ்தபா பார்ஸானி
என்ற குர்தி இனத்தவர் குர்திஸ்தான்
ஜனநாயகக் கட்சி (KDP) யை ஸ்தாபித்து, தன்னாட்சிக்காகப்
போராட்டம் மேற்கொண்டார். 1958 இல் நடைபெற்ற புரட்சிக்குப்
பின்னர் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பில் குர்தி இன மக்களின்
தேசியம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும், தன்னாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற பார்ஸானியின் திட்டம்,
அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து 1961 ஆம்
ஆண்டு KDP ஆயுதப் போராட்டத்தை
ஆரம்பித்தது.
1970 இல்
குர்திக்களின் தன்னாட்சியை அரசாங்கம் அங்கீகரித்தபோதும், மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு, 1974 இல் ஆயுதப் போராட்டம்
மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருடத்தின் பின்னர்,
KDP க்குள் உட்பூசல்கள் ஏற்பட்டு
ஜலால் தலபானி என்பவர் கட்சியை
விட்டு வெளியேறி, PUK கட்சியை ஸ்தாபித்தார். 1970 களின்
இறுதியில், குர்திக்கள் செறிவாக வாழ்ந்த -குறிப்பாக
எண்ணெய் வளம் மிக்க கிர்குக்-
பகுதிகளில் அரபுக்கள் குடியேற்றப்பட்டு, குர்திக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
2003 இல்
அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது KDP யும் PUK யும் அமெரிக்க
ஆதரவுப் போக்கைக் கடைபிடித்தன. சதாம் ஹுஸைனின் ஆட்சி
கவிழ்க்கப்பட்டதன் பின்னர், உருவாக்கப்பட்ட அனைத்து அரசாங்கங்களிலும் இக்கட்சிகள்
பங்கெடுத்தன. 2005 இல் உருவாக்கப்பட்ட குர்திஸ்தான்
பிராந்திய அரசாங்கத்தையும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி
அமைத்து ஆட்சி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
*****************
குர்திக்களின்
தன்னாட்சிக்கான போராட்டம் கிட்டத்தட்ட நூறு வருடங்களை எட்டியுள்ளது.
அவர்கள் தன்னாட்சிக் கோஷமெழுப்புவது, அவ்வந்த நாடுகளின் பார்வையில்
நோக்குககையில் மிகவும் கடினமான ஒன்றாகவே
தோன்றுகின்றது. இருப்பினும், குர்திக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கி, அவாகளையும் தேசிய
நீரோட்டத்தில் இணைத்தக் கொள்வதுதான் மிகச் சிறந்த தீர்வாக
அமையும். மத்திய கிழக்கில் வாழும்
குர்திக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால்தான், துருக்கி, ஈராக், சிரியா உள்ளிட்ட
ஏனைய குர்திக்கள் வாழுகின்ற நாடுகளின் ஸ்திரமான அரசியல் எதிர்காலம் அமையலாம்
என்று மட்டும் அனுமானிக்கலாம்.
(இக்கட்டுரையை
வரைவதற்கு அல்ஜஸீரா மற்றும் பிபிசியின் செய்திகளும்,
ஆய்வுகளும் துணையாக அமைந்தன.)
No comments:
Post a Comment