Thursday, December 12, 2013

பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வு மாநாடு

(அஷ்கர் தஸ்லீம்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறையின் ஏற்பாட்டில் 'பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம்' என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 27 ஆம் திகதி, தேசிய ஆய்வு மாநாடொன்று நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பு நிதியுதவி அளித்திருந்தது.

முழுநாள் மாநாடாக நடைபெற்ற இதில் விஷேட பேச்சாளராக கலாநிதி சுக்ரி, விஷேட அதிதியாக பேராசிரியர் தீரானந்த தேரர், சிறப்பு அதிதியாக நீதிபதி சீ.ஜீ வீரமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறை 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இத்துறையில் பட்டப்பின்படிப்புக் கற்கைகளைக் கொண்டிருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம் இதுதான்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இவ்வளவு பாரம்பரியம் மிக்க இந்த துறை இஸ்லாமிய வங்கியியல் மற்றும் வேறு சில தலைப்புக்களில் கருத்தரங்குகளை நடாத்தி வந்தபோதும் தேசிய ஆய்வு மாநாடு என்ற வகையில் இதுதான் முதற்தடவையாக நடாத்தப்பட்டது.

மாநாட்டின் விஷேட பேச்சாளர் கலாநிதி சுக்ரி, பன்மைத்துவம் குறித்து உரையாற்றினார். அவர் தனது உரையில்,

வித்தியாசமான கருத்தியல்கள் ஒன்றாக வாழ்வதுதான் பன்மைத்துவம். இஸ்லாம் பன்மைத்துவத்தை ஒரு யதார்த்தமாக ஏற்றுக் கொள்கின்றது. அதனால்தான், அது மக்களை விளித்து, உங்களை நாம் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்து, கூட்டங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று சொல்கின்றது.

நாம் ஒரு பூந்தோட்டத்துக்குள் நுழைந்தால், அங்கு வித்தியாசமான நிறங்களில் வித்தியாசமான பூக்களைக் காண்போம். இது எமக்கு பன்மைத்துவத்தின் அழகை விளக்குகின்றது. இஸ்லாத்தில் எதுவித நிர்ப்பந்தமும் இல்லை. மதீனா சமூகத்தில் அரபுகள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர். உஸ்மானிய ஆட்சியின்போதும் ஆர்மேனியப் பகுதி ஓதடொக்ஸ் கிறிஸ்தவர்கள் தமது மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றினர். எகிப்தின் கிப்தி கிறிஸ்தவர்களும் தமது நீண்டகால வரலாற்றில் எதுவித சிக்கல்களையும் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

விஷேட அதிதி பேராசிரியர் தீரானந்த தேரர் உரையாற்றும்போது,

இந்த மாநாட்டை நான் மெச்சுகிறேன். பல்லின சமூகம் என்ற சொல்லை நான் அவ்வளவு விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக இலங்கை சமூகம் என்று சொல்லலாம். இந்த இலங்கை நாட்டை சர்வதேசத்துக்கு முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினர். இப்னு பதூதா, பலாதூரி, இப்னு மஸ்ஊத், ஷக்ரயாத் போன்றோர் தமது எழுத்துக்களில் இலங்கை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கையை ஜஸீரதுல் யாகூத், செரன்தீப் என்ற சொற்களின் மூலம் சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தினர். இந்தப் பெயர்கள் சர்வதேசத்தை இலங்கையின்பால் கவர்ந்தெடுத்தன. இதன் மூலம் உலக மக்கள் இலங்கை குறித்து அறிந்து கொண்டனர். நாம் இவை பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகளில் ஈடுபடல் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிறப்பு அதிதி நீதிபதி சீ.ஜீ வீரமந்திரி உரையாற்றும்போது, நாம் பல மதங்களைக் கொண்டிருக்கிறோம். ஆரம்ப காலத்திலேயே பல நாடுகளுடனான தூதுவர் உறவு எமக்கிருந்தது. எமது நாட்டில் மிருகங்களுக்கான முதல் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்தது. எனவே, நாம் ஒரு முன்னுதாரண நாடு. முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டின் அடுத்த அங்கமாக ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன. ' பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம்' என்ற பிரதான தலைப்பின் கீழ் அமைந்திருந்த இந்த ஆய்வுக் கட்டுரைகள் வித்தியாசமான பல உப விடயங்களை அணுகுயிருந்தன.

சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் போல் மிகச் சிறந்தவையாக இருந்தன. அவற்றில், இலங்கை முஸ்லிம்களின் நவீன மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் - சித்தி லெப்பை மற்றும் ஏ.எம்.ஏ அஸீஸ் பற்றிய விஷேட குறிப்புகள் (கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்), இலங்கை முஸ்லிம்கள் தீவிரமயமாதலை தடுக்கும் காரணிகள் என்ன? - ஒரு சமூக வரலாற்று பகுப்பாய்வு (ரஸ்ஸாக் எம். கனி), நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பள்ளிவாசல்களின் வகிபாகம் (கலாநிதி எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் நுணுக்கமாக அமைந்திருந்தன.

மொத்தமாகச் சொல்வதாயின் இந்த தேசிய ஆய்வு மாநாடும், அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் காலத்தின் தேவையை உணர்ந்தவையாக அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தின் ஆய்வு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இதுபோன்ற ஆய்வு மாநாடுகள் இன்னும் அதிகமதிகம் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதற்கான முயற்சிகளை உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.




No comments: