சட்டத்தரணி கே.டபிள்யூ ஜனரஞ்சன அவர்கள் பிலியன்தலயைச்
சேர்ந்தவர். 1991 களில் ராவய பத்திரிகையில் கார்டூன் ஓவியராக இணைந்தார். பின்னர்,
அதன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். தற்போது அதன் பிரதம ஆசிரியராகப்
பணியாற்றுகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு
பகிர்ந்து கொள்கிறோம்.
நேர்காணல் – அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை எப்படி
நோக்குகிறீர்கள்?
மாகாணசபை தேர்தலை நோக்கும் போது நாம் ஒன்றைப் புரிந்து
கொள்ள வேண்டும். உண்மையில்
இந்தத் தேர்தல் வடக்கிற்கு மாத்திரம் உரிய தேர்தல்தான். அல்லது வடக்கில் மாத்திரம் நடைபெற்றிருக்க வேண்டிய
தேர்தலாகும். வடக்கில்
அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்பதனை அறிந்தே இருந்தது. அதனை சமப்படுத்துவதற்காகவே மத்திய, வடமேல்
மாகாணங்களில் தேர்தலை நடத்த வேண்டி வந்தது. வடக்கின் தோல்வியை இந்த இரண்டினதும்
வெற்றியைக் கொண்டு சமப்படுத்துவதே இதன் நோக்கம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த இரண்டையுமே அழுத்தம்
கொடுத்துப் பேசின.
எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கின் தேர்தல்
முக்கியமானது. ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் பல புரளிகளைக் கிளப்பியது. சிங்கள பௌத்தர்களுக்கு மத்தியில் இது
தனிநாட்டுக் கோரிக்கையை கொண்டது, நாட்டைப் பிரிக்கும் உள் நோக்கம் கொண்டது
என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது ஜனநாயக நீரோட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்த
முதல் சந்தர்ப்பமாகும். எனவே, அவர்களது பயணம் எப்படி அமையப் போகின்றது
என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்த நாட்டை பிரிப்பதாகவோ, வெளிநாடுகளுக்கு
இந்த நாட்டைக் காட்டிகொடுப்பதாகவோ அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. ஆனால், அப்படியான விடயங்கள் இவர்களது தேர்தல்
விஞ்ஞாபனத்தில் உள்ளதாகவே சிங்கள பௌத்தர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
ஒரு ஐக்கிய நாட்டுக்குள் தமது பிரதேசத்தை ஆளுவதற்கான
உரிமை தமக்கு வழங்குமாறே அவர்கள்
கேட்டார்கள். இது வடக்குக்கு மாத்திரமன்று எல்லா மாகாணங்களுக்கும் பொருத்தமானது.
இந்த உரிமை வடக்குக்கு மாத்திரமன்றி தெற்கு, மேல் என்று எல்லா மாகாணங்களுக்கும்
வழங்கப்படல் வேண்டும். தமது பிரதேசத்தை ஆளுவதற்கான முறைமையொன்றை உருவாக்கிக்
கொள்ளும் உரிமை சிங்களவர், தமிழர் என்று எல்லோருக்குமே வழங்கப்படல்
வேண்டும்.
போருக்குப் பிந்திய அரசு வடக்கில் பல்வேறு அபிவிருத்தி
வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால், யுத்தத்தால்
தோற்கடிப்பட்ட ஒரு சமூகம் வடக்கில் வாழ்கிறது. அவர்களும் இந்த நாட்டின் மக்கள்.
அவர்களில் பல பொதுமக்கள் இறந்தார்கள். அவர்களது சொத்துக்கள் இழக்கப்பட்டன.
இவர்களையும் ஆட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நாம் வலியுறுத்தி வந்தோம்.
அத்தோடு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தமது மனித கண்ணியத்தை பெற்றுக் கொள்ள
வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், இதில்
எதனையும் அரசு கணக்கிலெடுக்கவில்லை.
பாதைகளை செப்பணிட்டு தார் ஊற்றினால் மக்கள் தமக்கு
வாக்களிப்பார்கள் என்று அரசு நினைத்துக் கொண்டிருந்தது. 13 ஆம்
திருத்தத்தைப் பலப்டுத்துங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டியபோது, தமிழ் தலைவர்களுக்குத்தான் இவை தேவை.
மக்களுக்கு இவை முக்கியமில்லை, அவர்களுக்கு பாதைகளை செப்பணிடுவதும்
உணவும்தான் முக்கியம் என்று அரச தரப்பு கூறியது. ஆனாலும், தேர்தல்
பெறுபேற்றைப் பார்க்கும்போது அரச தரப்பின் இந்த வாதத்தையை மக்கள் புறக்கணித்திருப்பதனை
அவதானிக்கலாம். பாதைகளைச் செப்பணிடுவதையும் விட தமது கௌரவத்தையும் உரிமைகளையும்
மக்கள் மேலாகக் கருதுகிறார்கள்.
வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி
பெற்றிருக்கிறது. எனவே, இனி வரும்
காலங்களில் மத்திய அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு எப்படி
அமைய வேண்டும்?
இந்த நாட்டின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர
வேண்டுமாயின் பெடரல் முறைமையை நோக்கி நகர்வதுதான் சிறந்த வழி என்று நான்
கருதுகிறேன். அப்போதுதான் நாட்டைப் பிரிக்காது ஒரு நாடாக முன்செல்ல முடியும்.
ஆனாலும், இந்தத்
திட்டத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வர முடியாது. இது நீண்ட காலத் திட்டமாகவே
அமையும். பெடரல் முறைமை என்று பேசும்போது நாட்டில் புரளியொன்று ஏற்பட்டு விடலாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் இந்த
பெடரல் முறைமையை ஊக்குவிக்கும் அமைப்பிலேயே
அமைந்துள்ளது. அவர்கள் தூர நோக்குடன் இந்த விஞ்ஞாபனத்தை வரைந்துள்ளனர் போலும்.
பெடரல் முறைமை என்பதன் மூலம் நாடப்படுவது மத்திய அரசிடம் இருக்கும் சட்டவாக்க, நீதித்துறை, நிறைவேற்று அதிகாரங்களை பிராந்திய ரீதியில்
பகிர்ந்தளிப்பதாகும். எனவே, அமெரிக்கா, கனடா, இந்தியா போன்று இல்லாவிடினும் மாகாண சபை
முறையும் முழுமையற்ற ஒருவகை பெடரல் முறைமைதான். இது பெடரல் முறைமையை நோக்கி
பயணத்தின் ஒரு கட்டம்தான்.
எனவே, 13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தல், காணி மற்றும்
பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சில அமைச்சுக்களின் கீழ் கொண்டு
வரப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களை மீளவும் மாகாண சபைகளுக்கே வழங்கல்
ஆகியவற்றின் மூலம் மாகாண சபையை பலப்படுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பும்
இவற்றைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதுவரை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் அரசின்
செல்வாக்குள்ள சக்திகள்தான் ஆட்சிக்கு வந்தன. ஆனால், வட மாகாண சபை
தேர்தலில் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இன்னுமொரு
புறத்தில், இது வெறுமனே
ஒரு மாகாண சபை மாத்திரமல்லாது தேசியத்தை மையப்படுத்திய ஒரு குழுமமாகும். எனவே, சிங்கள
மக்களுடன் உறவாடுவது போன்று தமிழர்களுடன் உறவாட முடியாது.
இந்த சூழ்நிலையில் தேசியத்தை மையப்படுத்திய மக்களோடு
உறவாடுவது குறித்து அரச தரப்பு பாரதூரமாக யோசிக்க வேண்டும். இவர்களை ஆட்சியில்
உள்ளீர்த்து வேலை செய்வதா அல்லது புறந்தள்ளி வேலை செய்வதா என்பதை அரசு தீர்மானிக்க
வேண்டும். இவர்களை புறந்தள்ளி வேலை செய்தால், இந்தியா, அமெரிக்கா, ஐ.நா சபை
ஆகியவற்றிடம் சொல்வதற்கான நியாயங்களை இவர்கள் பெற்றுவிடுவர். எனவே, மத்திய அரசுக்கு மூளை இருந்தால், இந்த
நியாயங்களை இவர்கள் பெறாதவாறு வேலை செய்ய வேண்டும். இவர்களை பயமுறுத்துவதன்
மூலமல்லாது அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதன் மூலமே இதனை செய்ய வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது உரிமைகளை வென்றெடுக்கும்
அதேவேளை மத்திய அரசுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் போக்கை பின்பற்ற வேண்டும்.
ஏனெனில், இந்த ஆளும்
இரு தரப்புக்கும் இடையில் நெருக்கடிகள் ஏற்பட்டால் அது பிரதேச மக்களை பாதிக்கும்.
அரசியலமைப்பின்படி மாகாண சபைகளில் அதிகாரம் செலுத்தும் சக்தியை ஜனாதிபதியும்
பாராளுமன்றமும் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தப் பின்னணிகளையும்
புரிந்து நடக்க வேண்டும்.
நாட்டில் தற்போது பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்று இல்லை.
இது நாட்டின் அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது?
இந்த நாட்டில் வீதிக்கு வந்து போராடுகின்ற, பலம்வாய்ந்த
எதிர்க்கட்சியொன்று இல்லைதான். இன்னொரு புறத்தில், எதிர்க்கட்சியொன்று
இல்லை என்று சொல்வது யார்? அரச தரப்பு அவ்வாறு சொல்கிறது.
எதிர்க்கட்சியைப் பாதுகாப்பதற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ஜனநாயகத்தைப்
பேணுவதற்கு பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்று தேவை என்றால் அதனை பாதுகாப்பதில் அரசு
கவனம் செலுத்த வேண்டும். ஆனால், எதிர்தரப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்தி, அமைச்சுப்
பதவிகளைக் கொடுத்து, பணம் கொடுத்து, அவர்களது
இலஞ்ச ஊழல் விவகாரங்களை வெளியே கொண்டு வந்து அவர்களை ஆளும் தரப்புக்குள் இழுத்துக்
கொள்கின்றது. எனவே, நீங்கள்தானே
எதிர்க்கட்சியை இல்லாமலாக்கியுள்ளீர்கள் என்று அரச தரப்பிடம் கேட்க வேண்டும்.
அவர்கள்தான் எதிர்க்கட்சியை அழித்து ஜனநாயகத்தையும் அழித்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியொன்று இல்லை என்ற விடயத்தை மக்களும்
முன்வைக்கின்றனர். சிறந்ததொரு எதிர்க்கட்சி இருந்தால் இந்தப் பிரச்சினைகள்
ஏற்பட்டிருக்காது, தலைவரொருவர்
இருந்தால் நாமும் இணைந்து செயற்படுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியை
பலப்படுத்த நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று மக்களிடமும் கேட்க வேண்டும்.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி பொது வேலை நிறுத்தமொன்றுக்கு
அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இது வெற்றி
பெறவில்லை. ஏனெனில், மக்கள் இந்த அழைப்பை பொருட்படுத்தாது
வேலைக்குச் சென்றனர். அதே போன்றுதான் கெமுனு விஜேரத்னவும் வேலைநிறுத்தத்திற்கு
அழைப்பு விடுத்து, அது
தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நாட்டில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியொன்று இல்லை
என்பது உண்மைதான். ஆனால், மக்கள் வீதிக்கு வந்து போராடினால்
எதிர்க்கட்சியும் வர வேண்டிய நிலை தோன்றும். அந்நேரத்தில் எதிர்க்கட்சி
மறைந்திருக்க முடியாது. அப்படி மறைந்திருந்தால், மக்கள் அவர்களை
வீசிவிடுவர். இப்படியான மக்கள் இருந்திருந்தால் வடமேல் மாகாண சபையில் அரச
தரப்புக்கு வெற்றி கிட்டியிருக்காது.
நாம் இந்த நாட்டின் மக்களையும் விமர்சிக்க வேண்டும்.
ஏனெனில், தமது உரிமைகளை வென்றெடுக்கும் பணியை எதிர்க்கட்சிக்கும், ஊடகங்களுக்கும், சில நிறுவனங்களுக்கும் பொறுப்புச்சாட்டி
விட்டு இரவு நேர நாடகங்களைப் பார்த்து விட்டு தூங்கும் சமூகமாக மக்கள்
மாறிப்போயுள்ளனர்.
மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளை அவதானிக்கும்போது, அரசிடம்
இருந்து கிடைக்கும் விடயங்களில், மக்கள்
திருப்தியடைந்துள்ளனர் என்றுதானே தெரிகிறது?
வட மாகாண சபையைத் தவிர்த்து வடமேல் மற்றும் மத்திய மாகாண
சபைகைளைப் பார்க்கும்போது, அரசு
தருபவற்றை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்றுதான் தெரிகிறது. இலங்கையில்
தேர்தல் என்பது தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு அளிக்கப்படும் வாக்கு
என்பதை விட தமக்குக் கிடைப்பவற்றை மையப்படுத்தி வாக்களிக்கும் ஒரு விடயமாகவே
இருக்கின்றது. எனவேதான், இந்தத் தடவை
காற்சட்டை, தொலைபேசி, கூரைத்
தகரங்கள் வழங்கப்பட்டன. தமக்குக் கிடைப்பவற்றை மையப்படுத்தியே மக்கள்
வாக்களிக்கின்றனர்.
ஹலால் தொடர்பான பிரச்சினையொன்று இருந்தது. தற்போது
முஸ்லிம் தீவிரவாதம் பற்றிப் பேசப்படுகின்றது. நீங்கள் இதனை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
நான் ஏற்கனவே சொன்னது போன்று யுத்தம் வெற்றி
கொள்ளப்பட்டதன் பின்னர், தமிழ் மற்றும் முஸ்லிம்களை ஆட்சியில்
இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது
நடைபெறவில்லை. எனவே, யுத்த வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு பொது
பல சேனா, ராவணா பலய போன்ற சில கடும்போக்கு சிங்கள பௌத்த
அமைப்புக்கள் வெளியே வந்தன. இவர்கள் யுத்த வெற்றியை பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில்
சிங்கள பௌத்தர்கள்தான் சக்திவாய்ந்தவர்கள், தமிழர்களும்
முஸ்லிம்களும் இரண்டாம் தரமானவர்கள், பௌத்தர்கள்
சொல்வதற்கேற்பவே இவர்கள் வாழ வேண்டும் என்பதை சொல்ல முயற்சித்தனர்.
பௌத்தர்கள் வீழ்ச்சியடைந்திருப்பதற்கான உள்ளார்ந்த
காரணங்களை தேடுவதனை விட்டுவிட்டு, தமிழர்களும் முஸ்லிம்களும்தான் பௌத்தர்களின்
வீழ்ச்சிக்குக் காரணம் என்றே இவர்கள் காட்ட முயல்கின்றனர். யுத்தம் மூலம்
தமிழர்கள் அமைதிப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது முஸ்லிம்களையே இவர்கள் இலக்கு
வைத்துள்ளனர்.
என்றோ ஒரு நாள் மதச்சார்பற்ற அரசியல் கொண்ட நாடாக இந்த
நாடு மாற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அப்போது, அரசு மதத்தை
முழுமையாக துறந்து இருக்கும். ஆனால், மக்களுக்கு
தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரமும் காணப்படும்.
ஹலாலுக்கு எதிரான நடவடிக்கைகள், இனவாதமும்
மதவாதமுமாகும். முஸ்லிம்கள் சிங்கள பௌத்தர்களது அதிகாரத்தின் கீழ்தான் இருக்க
வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம் சொன்னார்கள். நாம் இதனை எதிர்த்தோம்.
முஸ்லிம்களது உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குரல்கொடுத்தோம்.
மாடறுப்புககு எதிரான பிரச்சாரமும் மாட்டின் மீது கொண்ட
அன்பினால் ஏற்பட்டதல்ல. முஸ்லிம்கள்
மாட்டிறைச்சியை உணவாகக் கொள்வதனாலேயே இந்த எதிர்ப்புப் பிச்சாரம். பின்னர், முஸ்லிம்
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம் வியாபாரிகள் தாக்கப்பட்டனர். முஸ்லிம்கள் சிங்கள
இனத்தின் குழந்தைப்பேற்றை இல்லாமலாக்கப் போகின்றனர் என்று பிரச்சாரம் செய்தனர்.
எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத இந்தப்
பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்கின்ற ஒரு சமூகம் இலங்கையில் இருக்கின்றது. ஆனாலும், காலப்போக்கில், எதிர்பார்த்தது
போன்றதொரு மக்கள் செல்வாக்கு அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புக்
கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையில்
ஒரு முஸ்லிம் தீவிரவாதம் இருப்பதாகவும் அதற்கெதிராக ஒரு பௌத்த தீவிரவாதம்
மேலெழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தவறானதொரு கருத்தாகும். ஏனெனில், முஸ்லிம்
தீவிரவாதம் இருப்பதனால் பௌத்த தீவிரவாதம் உருவாகியுள்ளது என்பது பொய்யான
கருத்தாகும். உண்மையில், பௌத்த தீவிரவாதம்தான் உருவாகி இருக்கின்றது.
அதனை அரசு அனுமதிக்கும் வகையில் நடந்து கொண்டது. அதனை எதிர்க்கவில்லை.
கோத்தபாய கருத்துத் தெரிவித்ததும், தமது கருத்தை கோத்தபாய ஏற்றுக் கொண்டுள்ளதாக
பொதுபல சேனா அறிவித்தது. உண்மையில், கோத்தபாய
தெரிவித்த கருத்து தகவல்கள் அடிப்படையில் பார்க்கும்போதும் பிழையானதாகும். அவரின்
கருத்துக்கு எதிராக அரசாங்கத்துக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பலத்த
விமர்சனங்கள் வந்தன.
பொது பல சேனாவின் பின்னால் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக
சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. இந்தக் கருத்து உண்மைதானா?
இந்தக் கருத்தை நிறுவுவதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனாலும், இவர்களது
செயற்பாடுகளை அரசு அனுமதிக்கிறதா என்றதொரு கருத்து இருக்கின்றது. உதாரணமாக, காலியில்
ஸ்தாபிக்கப்பட்ட பொது பல சேனாவின் நிறுவனமொன்றை திறப்பதற்கு கோத்தபாய ராஜபக்ஷ
செனறிருந்தார். அவர் சென்றதன் மூலம், பொது பல சேனா
இதுவரை செய்துவந்த கடும்போக்கு செயற்பாடுகளை அனுமதிக்கும் வகையில் அது அமைந்து
விடும் என்று நாம் விமர்சித்தோம். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில்
அவர் தெரிவித்த கருத்துக்கள் என அனைத்தையும் எடுத்து நோக்கினால், அவர்களை
அனுமதிக்கும் ஒருவைகப் போக்கு இருக்கின்றது என்று சொல்லலாம். ஆனால், கோத்தாபய
ராஜபக்ஷவுக்கும் பொது பல சேனாவுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகச் சொல்வதற்கான
தெளிவான தரவுகள் இல்லை.
இவர்களது நடவடிக்கைகளை எதிர்த்தால் அவை இன்னும்
அதிகரிக்கலாம் என்பதனால், எதிர்க்காமல் விட்டுவிடுவதால் அவர்கள்
பலவீனமடைந்து விடுவர் என்றவகையில் அரசு செயற்படுவதாக சிலர் சொல்கின்றனர். ஆனால், அவர்களை
அவ்வாறே விட்டுவிடுவதனால் அவர்களின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை
அனுமதிக்கும் வகையாகவும் அது அமைந்து விடுகின்றது. எனவே, அரசு மக்கள்
தரப்பிலிருந்து சிந்திப்பதாயின் சமாதானத்தை மதிப்பதாயின் இவற்றுக்கு எதிராக
நாட்டின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
2015 ஆம் வருடத்துடன் 1915 இல் நிகழ்ந்த
கலவரம் நூறு வருடங்களை நிறைவு செய்கின்றது. எனவே, 2015 ஆம் வருடம்
மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படலாம் என்று பலரும் சொல்கின்றனர். உங்களது பார்வையில்
அப்படியானதொரு கலவரம் ஏற்படலாமா?
நாம் எமது வரலாற்றில் நீண்ட யுத்தங்களை சந்தித்து
வந்திருக்கிறோம். எனவே, மீண்டுமொரு யுத்தத்தை நோக்கி மக்கள்
செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகளை அறிவு ரீதியாகத்
தீர்த்துக் கொள்வதற்கான அனுபவங்களை நாம் பெற்றிருக்கிறோம். ஆனாலும், சிங்கள, தமிழ், முஸ்லிம்
சமூகங்களுக்கு இடையில் ஒரு பதட்ட நிலை தொடரலாம்.
இதன்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய சில
தரப்புகள் இருக்கின்றன. முதலாவதாக அரசு
பொறுப்பு வாய்ந்த முறையில், மக்களுக்கு மத்தியில் பதட்ட நிலையை
இல்லாமலாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரையும் அரவணைத்து
எவரது பக்கத்தையும் எடுக்காது, அனைவரது
உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
இரண்டாவதாக ஒவ்வொரு இனங்களது தலைமைகளும் தமது உரிமைகளை
பாதுகாத்துக் கொள்கின்ற அதேவேளை, நெருக்கடிகள் ஏற்படாதவாறு செயற்படுவதற்கு
முயற்சிக்க வேண்டும். மூன்றாவதாக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இனங்களுக்கு இடையிலான பதட்டத்தை அதிகரிப்பதில் ஊடகங்கள் ஈடுபட்டதை அவதானித்தோம்.
ஆனால், பதட்டங்களை இல்லாமலாக்கும் வகையிலேயே ஊடகங்கள் செயற்பட
வேண்டும். நான்காவதாக இந்த நாட்டின் பொது மக்கள், சகவாழ்வை
மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு இனத்தவரும் தமது
தனித்துவங்களைப் பேணிக் கொண்டு இலங்கையராக வாழ்வது எப்படி என்று சிந்திக்க
வேண்டும். அடுத்ததாக, எமது நாட்டின் ஆட்சி முறைமையை
ஜனநாயகப்படுத்துவது எப்படி என்றும் நாம் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment