மாலைத்தீவுகள் இலங்கையிலிருந்து தென் மேற்குப் பகுதியாக சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தீவுகளினாலான ஒரு நாடாகும். இங்கு சுமார் 1200 தீவுகள் காணப்படுகின்றன. இவற்றில் எந்தவொரு தீவும் கடல் மட்டத்திலிருந்து 1.8 மீற்றர்களை விட உயரமானதாக இல்லை. அத்தோடு, பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிப்பதுமில்லை.
அழகிய கடற்கரைகளையும், மணல் பாங்கான நிலத்தையும் கொண்டிருப்பதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நாடாகவும் மாலைத்தீவுகள் மாறியுள்ளது. எனவே, சுற்றுலாத் துறையானது மாலைத்தீவுகளின் வருமானத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான துறையாக உள்ளது.
மாலைதீவின் பிரதான வருமான வழியாக சுற்றுலாத் துறை இருக்கின்ற அதேவேளை, மீன்பிடித் துறை மற்றும் படகு தயாரித்தல் துறை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடிக்கின்றன. எனவே, மாலைதீவின் பிரதான வருமான வழிகள் அனைத்தும் கடலைச் சார்ந்ததாக இருப்பதை அவதானிக்கலாம்.
298 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட மாலைத்தீவுகளின் சனத்தொகை 324,000 பேராவர். இவர்கள் திவெஹி மொழியை பேசுகின்றனர். இந்த மொழியானது மாலைத்தீவர்களாலும், மாலைத்தீவுகளை அண்மித்ததாக உள்ள இந்திய லக்சத்வீப் யூனியனில் உள்ள மினிகோய் தீவிலுள்ளோராலும் பேசப்படுகின்றது.
பெரும்பாலும் அனைத்து மாலைத்தீவர்களும் ஒரே இனத்தவர்களாவர். வரலாறு நெடுகிலும் பல்வேறுபட்ட மக்கள் மாலைதீவில் குடியேறியுள்ளார். இங்கு குடியேறிய முதலாமவர்கள் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த தமிழர்களும், சிங்களவர்களும் என்றே நம்பப்படுகின்றது.
அத்தோடு, மடகஸ்கார், அரபு நாடுகள், மலேசியா, சீனா போன்ற பகுதிகளிலிருந்து வந்த மக்களும் மாலைத்தீவுகளை தரிசித்துள்ளனர். மாலைத்தீவர்கள் பேசும் திவெஹி மொழி ஒரு இந்து-ஐரோப்பிய மொழியாகும். அரபு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் மத, பொருளாதார, தொடர்பாடல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
12 ஆம் நூற்றாண்டில் மாலைத்தீவுகளில் இஸ்லாம் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து மாலைதீவர்கள் இஸ்லாத்தை ஏற்கத் தொடங்கினர். இன்று இஸ்லாம் தான் மாலைத்தீவுகளின் பிரதான மதமாகும்.
மாலைத்தீவுகள் 1558 முதல் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பு காரணமாக 1573 இல் போர்த்துக்கேயர் அங்கிருந்து வெளியேறினர். மீளவும் 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த டச்சுக்காரர்களின் ஆக்கரமிப்புக்கு மாலைத்தீவுகள் உட்பட்டது. 1796 இல் பிரித்தானியரின் வசமானது மாலைத்தீவுகள். பின்னர், 1965 ஜுலை 26 ஆம் திகதி பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
2004 இல் தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளை சுனாமி தாக்கியபோது, மாலைத்தீவுகளும் பாதிக்கப்பட்டது. பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. பல தீவுகள் மிக மோசமானப் பாதிக்கப்பட்டன. இந்த சுனாமி அனர்த்தத்தினால் மாலைத்தீவுகளின் அபிவிருத்தி 20 வருடங்களால் பின்னோக்கிச் சென்றதாக மாலைத்தீவுகள் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
மாலைத்தீவுகள் தகவல் பெட்டகம்
உத்தியோகபூர்வ பெயர் : மாலைத்தீவுகள் குடியரசு
பரப்பளவு : 298 சதுர கி.மீ.
பிரதான மொழி : திவெஹி
பிரதான மதம் : இஸ்லாம்
ஆயுள் எதிர்பார்ப்பு : 76 (ஆண்), 79 (பெண்)
நாணயம் : ரூஃபியா